இசையமைப்பாளர் டி இமான், மனைவி மோனிகா ரிச்சர்டுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழ் திரையுலகின் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான டி.இமான், தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நட்சத்திர நடிகர்களின் திரைப்படங்களுக்கும் இசையமைத்து பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். அஜித்தின் விஸ்வாசம் படத்திற்காக தேசிய விருது பெற்ற டி.இமான் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.
இதனால் ரசிகர்கள் மத்தியில் அவர் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறார். இந்நிலையில் டி.இமான் தனது மனைவி மோனிகா ரிச்சர்ட்-ஐ விவாகரத்து செய்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக டி.இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் “என்னுடைய நல விரும்பிகளுக்கும், இசை ரசிகர்களுக்கும் நான் ஒன்றை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். வாழ்க்கை என்பது பலவிதமான பாதைகளைக் கொண்டது என்று நாங்கள் புரிந்து கொண்டோம்.
இந்நிலையில் நானும் என் மனைவி மோனிகா ரிச்சர்டும் சட்டபூர்வமாக கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விவாகரத்து பெற்றுக் கொண்டோம். ஆகவே இனி நாங்கள் இருவரும் கணவன் மனைவி அல்ல. ஊடகங்கள், ரசிகர்கள் மற்றும் இசை ஆர்வலர்கள் எங்களுடைய தனிப்பட்ட முடிவுக்கு மதிப்பளித்து வாழ்வின் அடுத்தக்கட்டத்திற்கு நாங்கள் செல்ல ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார். இவ்வாறு டி.இமானின் இந்த அறிவிப்பு திரையுலகிலும் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் முன்னாள் மனைவி மீது குழந்தைகளின் பாஸ்போர்ட் தொலைந்து விட்டதாக கூறி புதிய பாஸ்போர்ட் பெற்றதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தொடர்பாக இமான் தெரிவித்ததாவது, பழைய பாஸ்போர்ட் இருக்கும் போது புதிய பாஸ்போர்ட் வாங்குவது சட்ட விரோதமானது. இதற்காக தனது மனைவி மீது நடவடிக்கை எடுங்கள். மேலும் புதிய பாஸ்போர்ட்டை ரத்து செய்ய சென்னையில் உள்ள மாநில பாஸ்போர்ட் அதிகாரியிடம் புகார் அளித்ததேன். அதனை விசாரித்த பாஸ்போர்ட் அதிகாரி நீதிமன்றத்தின் உத்தரவு இல்லாமல் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கூறிவிட்டார்கள்.
இதனைத் தொடர்ந்து குழந்தைகளை சந்திக்க விடாமல் செய்யும் வகையில் அவர்களை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான புதிய பாஸ்போர்ட் வாங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், தலைமை மற்றும் மாநில பாஸ்போர்ட் அதிகாரி மற்றும் இமானின் முன்னாள் மனைவி மோனிகா ஆகியோரிடம் விசாரணை நடத்திய பிறகு இந்த வழக்கினை ஜூன் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதனை தொடர்ந்து இமான் தனது மனைவியை விவாகரத்து செய்து பல மாதங்களுக்கு பிறகு புகார் அளித்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.