தி.மு.க. – அ.தி.மு.க. வினர் திரண்டதால் வாக்குச்சாவடி மையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள மருங்காபுரி ஒன்றியம் 10-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான வாக்குப் பதிவு தொடங்கியது. தற்போது வளநாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 6 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வாக்குப்பதிவு 5 மணிக்கு முடிவடைய இருந்த நிலையில் காவல்துறையினர் பள்ளி கேட்டை மூடினர். அப்போது அங்கு வந்து தி.மு.க. வினர் சிலர் நோயாளிகளுக்காக 5 முதல் 6 மணிவரை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா நோயாளிகள் யாரும் இல்லாத காரணத்தால் அவர்களுக்கான வாக்குப்பதிவு நேரத்தில் மற்ற வாக்காளர்களை வாக்களிக்க அனுமதிக்க வலியுறுத்தியுள்ளனர். ஆனால் வாக்குச்சாவடியில் உள்ள மைய அலுவலர்கள் இதுகுறித்து பதில் அளிக்காததால் தி.மு.க. வினர் அங்கிருந்து சென்று விட்டனர்.
இந்நிலையில் அங்கு வந்த அ.தி.மு.க. வினர் 5 மணிக்கு பிறகு நோயாளிகள் தவிர மற்றவர்களை அனுமதிக்கக் கூடாது எனக் கூறி அங்கிருந்த காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனையடுத்து அ.தி.மு.க. வினர் வாக்குச்சாவடி மையத்தின் நுழைவாயிலில் உள்ள தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே தி.மு.க. வினரும் சம்பவ இடத்தில் குவிந்ததால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து போகச் செய்தனர். இதற்கிடையே வாக்குப்பதிவு நேரம் முடிவடைந்த நிலையில் வாக்கு பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையத்திற்கு பாதுகாப்புடன் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டன.