தி.மு.க. பிரமுகர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள மருதூர் பகுதியில் தி.மு.க. பிரமுகரான சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சங்கரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தமிழன், தினகரன் என்ற 2 மகன்களும் திவ்யபாரதி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் சண்முகம் சாலவாக்கம் காவல் நிலையத்திலும் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடமும் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது என கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்திருந்தார். இந்நிலையில் மருதூர் பெட்ரோல் பங்க் அருகில் சண்முகம் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு அ.தி.மு.க. வை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் மீது சண்முகம் ஊழல் புகார் அளித்துள்ளார். அதனால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். எனவே இது சம்பந்தமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கொலை தொடர்பாக மதுரை சேர்ந்த முத்து, அவருடைய மகன் இன்பசேகர் உள்ளிட்ட 6 பேரை காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.