கமல்ஹாசன் அறுவை சிகிச்சை முடிந்து தற்போது நலமுடன் உள்ளார் என்று அவரது மகள்கள் தெரிவித்துள்ளனர்.
வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தை செய்து வந்தார். அவர் ஏற்கனவே தனக்கு காலில் சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் அதற்காக சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ளப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அவர் காலில் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார். அதுபற்றி கமல்ஹாசனின் மகள்கள் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷராஹாசன் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில், கமல்ஹாசன் தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் நலமாகவும், உற்சாகமாகவும் உள்ளார். அவர் இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்குள் வீடு திரும்புவார்.
அதன் பின் சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு அவர் மக்களை சந்தித்து மகிழ்விப்பார். மேலும் அவருக்கு நீங்கள் அளித்த அன்பிற்கும், பிரார்த்தனைக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.