உயிருடன் இருக்கும் மகளுக்கு தந்தை கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தேனி மாவட்டத்தில் இருக்கும் சின்னமனூரை சேர்ந்தவர்கள் ஜெயபால்-செல்வி தம்பதியினர். இவர்களுக்கு கீர்த்தனா என்ற மகள் உள்ளார். ஜெயபால் பெங்களூரில் குடும்பத்தினருடன் பணியின் நிமித்தம் தங்கியிருந்த நிலையில் மகள் கீர்த்தனாவிற்காக தனது சொந்த ஊரான தேனிக்கு குடும்பத்துடன் வந்துள்ளார். அங்கு இளைஞர் ஒருவருக்கும் கீர்த்தனாவிற்கும் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது.
கடந்த புதன்கிழமை அன்று திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டு உறவினர்கள் அனைவருக்கும் பத்திரிக்கைகள் வினியோகிக்கப்பட்டன. இந்நிலையில் கீர்த்தனா வீட்டிற்கு பால் வாங்கி வருவதாக கூறிவிட்டு கடந்த சனிக்கிழமை அன்று வெளியில் சென்றுள்ளார். ஆனால் அதன் பிறகு அவர் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. கீர்த்தனாவை காணாமல் குடும்பத்தினர் தவித்து வந்த நிலையில் அவர் ஒரு இளைஞருடன் சென்றுவிட்டதாக பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. இதனால் மிகுந்த அதிர்ச்சி அடைந்த கீர்த்தனாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கீர்த்தனாவும் அவரை அழைத்துச் சென்ற இளைஞரும் திருமணம் செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இதனை அறிந்த ஜெயபால் மகளின் மீது கோபம் கொண்டு தன் சொந்த ஊரில் மகள் கீர்த்தனா உயிரிழந்துவிட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் தயார் செய்து ஒட்டியுள்ளார். மகள் உயிருடன் இருக்கும் போதே தந்தை அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.