கன்னியாகுமரி அருகே ராட்சத அலை தாக்கி சுவர் இடிந்து விழுந்த விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் பகுதியை அடுத்த அழிக்கால் பகுதியில் நேற்று முன்தினம் அதீத கடல் சீற்றம் ஏற்பட்டு உள்ளது. இதனால் கடலில் ஏற்பட்ட ராட்சத அலைகள் அழிக்கால் பகுதியில் மேற்கு தெருவிற்குள் நுழைந்து, வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்ததுள்ளது. கடல்நீர் உள்ளே புகுவதை தடுப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த பிரதீப் அஸ்வின் என்ற இளைஞர் மணல் மூட்டைகளை வீட்டின் வாசலில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார். அவருக்கு அவரது பக்கத்து வீட்டு இளைஞர்களும் உதவி செய்து கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக ராட்சத அலை தாக்கி அவரது வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து 3 பேர் மீதும் விழுந்ததில், பிரதீப் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு உதவி செய்த இரண்டு இளைஞர்களும் படுகாயமடைந்தனர்.பின் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அக்கம்பக்கத்தினர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.பின் காவலர்கள் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இறந்த இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து இறந்த வாலிபரின் உறவினர்கள் மற்றும் மீனவ சமுதாயத்தை சேர்ந்த சிலர் ஒன்று கூடி, சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது இறந்த வாலிபரின் குடும்பத்திற்கு ரூபாய் 30 லட்சம் அளவில் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
அதேபோல் அழிக்கால் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்க உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்தனர். பின் இது குறித்து காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்ட சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். இவர்களை தொடர்ந்து துறை ரீதியான உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்போம் என்று உறுதி அளித்ததன் பேரில் 2 மணி நேரம் கழித்து போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.