திருச்சி அருகே சத்திரம் வழித்தடத்தில் செல்லும் மாநகர பேருந்து நாள்தோறும் பழுதடைவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து திருபைஞ்சீலி வரை நாள்தோறும் அரசு மாநகர பேருந்து ஒன்று பள்ளி, கல்லூரி, மாணவ மாணவிகள் கூலித் தொழிலாளிகள் என 100க்கும் மேற்பட்ட பொது மக்களை ஏற்றிச் சென்று வருகிறது. இந்நிலையில் இந்த பேருந்து மிகவும் பழைய பேருந்து என்பதால் அடிக்கடி பழுதாகி நடுவழியில் நின்று விடும்.
அதேபோல் நேற்று காலையில் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேருந்து டயரில் இருந்து துர்நாற்றத்துடன் காற்று வெளியேறி உள்ளது. இதனை கண்ட டிரைவர் உடனடியாக பேருந்து நிலையம் அருகே வண்டியை நிறுத்திவிட்டு பயணிகளை உடனடியாக இறங்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
பின் நடுவழியில் இறக்கப்பட்ட பயணிகளில் சிலர் அடுத்த பேருந்தில் ஏறி பணிக்குச் செல்ல மற்றவர்கள் குறைவான தொகையை கொண்டு வந்ததன் காரணமாக வெகுநேரம் பேருந்து தயாராகும் வரை காத்திருந்தனர். நாள்தோறும் இதே கொடுமை நடப்பதால் இப்பகுதியில் புதிய பேருந்து பயன்பாட்டிற்கு விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.