உணவகம் ஒன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு அட்டகாசமான சலுகைகளை வழங்கி வருவது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத் தாண்டவமாடி வருகிறது. இதனால் உயிர் பலிகளும் அதிகரித்துள்ளன. இதையடுத்து கொரோனாவிற்கு முடிவு கட்டுவதற்காக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டிலும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மொத்த மக்கள் தொகை சுமார் 1 கோடி ஆகும். இதில் ஏற்கெனவே சுமார் 25 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு விட்டது.
இதையடுத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் துபாயில் உள்ள சில ஹோட்டல்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடி வழங்கி வருகின்றன. துபாயில் உள்ள கேட்ஸ் ஹாஸ்பிடாலிட்டி உணவகத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பில்லில் 10% தள்ளுபடி சலுகை வழங்கப்படுகின்றது. இரண்டு தடுப்பூசிகள் போட்டுக்கொண்டவர்களுக்கு பில்லில் 20% தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இதையடுத்து இந்த ஹோட்டளுக்கு வருபவர்களின் கூட்டம் களைகட்டியுள்ளது. இந்நிலையில் இந்த உணவகத்தில் சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் தள்ளுபடி பெற வேண்டுமெனில் தடுப்பூசி போட்ட ஆவணத்தை காட்ட வேண்டும். அதன் பின்னர் தான் தள்ளுபடி சலுகை வழங்கப்படும். இந்த அட்டகாசமான சலுகையானது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.