தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்களின் உருவம் பதித்த மோதிரங்கள் தீவிரமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.
அனைத்து அரசியல் கட்சியினரும் தங்களது கட்சி சார்ந்த அடையாளங்களை வெளிப்படுத்துவதற்காக கட்சி சார்ந்த சின்னத்தை தங்களோடு வைத்திருப்பார்கள். அதனடிப்படையில் வந்ததுதான் கரை வேட்டி, வண்ணத் துண்டு, சட்டைப்பையில் தலைவர் படம் வைத்திருப்பது, டாலர்கள் அணிவிப்பது போன்றவை. அந்த வரிசையில் தங்களது தலைவர்களின் உருவம் பொறித்த பெரிய மோதிரம் போடுவதும் தற்போது மிகவும் பிரபலமாகிவிட்டது.தற்போது தேர்தல் மிகவும் நெருங்கி வரும் வேளையில் பெரிய மோதிரத்திற்கான தேவையும் அதிகமாகி உள்ளது.
பரப்புரையின் போது அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதற்கு, கட்சித் தலைவர்களின் உருவம் மற்றும் கட்சி சின்னம் பதித்த மோதிரங்களை வாங்குவதற்காக அதனை தயாரிக்கும் நிறுவனங்களை தேர்தல்களை சிப்பாய்கள் தேடி செல்கின்றனர்.ஈச்சனாரி டவுன்ஹால் பகுதியில் உள்ள சர்வம் மெட்டல் நிறுவனம், இரவு பகலாக வேலை செய்து தலைவர்களின் படம் பொரித்த மோதிரங்களை தயாரித்து வருகின்றனர்.
தற்போது வாடிக்கையாளர்கள் அவர்களுக்குப் பிடித்த வகையில் மோதிரங்களை வாங்கி விரும்பி அணிவதால் முன்பு இல்லாத அளவிற்கு தற்பொழுது அதிக அளவு மோதிரம் விற்பனை செய்யப்படுகிறது என்று சர்வம் மெட்டல் நிறுவன உரிமையாளர் பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார். கொரோனாவால் நிதி நெருக்கடியில் இருந்த தங்களுக்கு தேர்தல் நேர வேலையால் மன நிம்மதி ஏற்பட்டுள்ளது என்று மோதிரம் தயாரிக்கும் தொழிலாளர்கள் கூறுகின்றனர். தேர்தலுக்கு மேலும் மெருகூட்டும் வகையில் இந்த மோதிரங்கள் இருக்கப் போகிறது.