உணவு பற்றாக்குறை காரணமாக 1.28 லட்சம் சிறுவர்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐநா எச்சரித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு தொடக்கம் முதல் தற்போது வரை ஏராளமான மக்கள் இந்த கொடிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் இதற்கு பலியாகியுள்ளனர். இது ஒருபுறமிருக்க நோயின் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான ஒரே ஆயுதமாக ஊரடங்கு பார்க்கப்பட்டதால், அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு விதிக்கப்பட்டது.
இதன் காரணமாக உணவுப் பொருள் வினியோகம், வேளாண்மை உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் ஒருபுறம் கொரோனாவால் உயிரிழந்து வரும் இந்த சூழ்நிலையில், உணவு பற்றாக்குறை காரணமாக இந்த ஆண்டு 1.28 லட்சம் சிறுவர்கள் உயிரிழக்கும் அபாயம் நிலவி வருவதாக ஐநா எச்சரித்துள்ளது. உணவு பற்றாக்குறை அதிகரித்துள்ளதாக தெரிவித்த ஐநா அந்த பிரச்சனையை சமாளிப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.