Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹேக் செய்யப்பட்ட முன்னாள் ஆஸி. வீரரின் ட்விட்டர் பக்கம்!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான டேரன் லீமனின் ட்விட்டர் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது.

பிரபல நட்சத்திர நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளக் கணக்குகள் ஹேக்கர்களால் எளிதில் ஹேக் செய்யப்பட்டுவருகின்றன. அந்தவகையில், தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான டேரன் லீமன் சிக்கியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் பிக் பாஷ் டி20 தொடரில் பிரிஸ்பேன் ஹீட் அணியின் பயிற்சியாளராக இருந்துவரும் லீமனின் ட்விட்டர் கணக்கை நேற்று ஹேக்கர்கள் முடக்கினர். மேலும் அவரது ட்விட்டர் பக்கத்தின் பெயரை அமெரிக்காவால் கொல்லப்பட்ட ஈரான் நாட்டு ராணுவத் தளபதி காசிம் சுலைமானியாக மாற்றியுள்ளனர்.

Dar

இதுமட்டுமில்லாமல், அமெரிக்கா – ஈரான் இடையே பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், ஈரான் நாட்டிற்கு எதிராகச் சர்ச்சைக்குரிய பதிவுகளையும் அவர்கள் பதிவிட்டுள்ளனர். இதையடுத்து லீமனின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதை பிரிஸ்பேன் ஹீட் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒப்புக்கொண்டது.

இது தொடர்பாக அந்த அணி தனது ட்விட்டர் பக்கத்தில், “லீமனின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதை நாங்கள் அறிவோம். விரைவில் இந்த நிலைமையை சரிசெய்ய ட்விட்டர் நிறுவனத்துடன் தொடர்ந்து பணியாற்றிவருகிறோம். இந்தத் தவறுக்காக நாங்கள் வருந்துகிறோம்” எனப் பதிவிட்டது.

லீமன் இறுதியாக, ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக அந்நாட்டு அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னேவின் ட்வீட்டை ரீ-ட்வீட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |