இன்று முதல் கோவில்கள் திறப்பு அனுமதி அளிக்கப்பட்டதால் பக்தர்கள் கோவிலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் தரிசனம் செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் நேற்றுடன் 3 ஆம் கட்ட ஊரடங்கு முடிவடைந்த நிலையில் இன்று தொடங்கியுள்ளது நான்காம் கட்ட ஊரடங்கு. இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு தெரிவித்துள்ளது. அந்த வகையில் பொது போக்குவரத்து, கோவில்கள் திறப்பு, பூங்காக்கள், ஷூட்டிங் அனுமதி, போன்றவை தொடங்கப்பட்டுள்ளன. இன்று முதல் பேருந்து சேவைகள் தொடங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதை தொடர்ந்து, திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி ஆலயத்தில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டது. கோவிலுக்கு வரத் தொடங்கிய ஏராளமான பக்தர்களுக்கு, டோக்கன் முறையில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
சென்னை கபாலீஸ்வரர் ஆலயத்திற்கு வந்த பக்தர்கள் கொரோனா முன்னெச்சரிக்கையாக முக கவசம் மற்றும் தனிநபர் சமூக இடைவெளி ஆகியவற்றை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோல் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் கீழ சன்னதி கோபுர வாயில் மட்டுமே திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 5 மாத கால இடைவெளிக்கு பிறகு கோவில் திறக்கப்பட்டதை தொடர்ந்து, பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோவிலில், பக்தர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதேபோன்று ஸ்ரீரங்கம், கரூர், திருச்சி மற்றும் காஞ்சிபுரம் போன்ற பல்வேறு பகுதிகளில் திறக்கப்பட்ட கோவில்களிலும் பக்தர்கள் ஆர்வமுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.