விருதுநகர் மாவட்டத்தில் அனுமதியின்றி திறந்த 2 சலூன் கடைகளுக்கு தாசில்தார் சீல் வைத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த சில வாரங்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தியிருந்த நிலையில் நேற்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் காய்கறி, பலசரக்கு போன்ற அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை சலூன் கடைகளுக்கு எவ்வித அனுமதியும் அளிக்கப்படவில்லை.
இதனையடுத்து விருதுநகர் மாவட்டம் தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையில், கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து ஊரடங்கு விதிமுறைகளை மீறி பாவடிதோப்பு பகுதியில் 2 சலூன் கடைகள் செயல்பட்டுள்ளன. இதனை பார்த்த தாசில்தார் மற்றும் அலுவலர்கள் உடனடியாக அந்த கடைக்கு சென்று சீல் வைத்துள்ளனர்.