பஞ்சாப் அணிக்கெதிராக போட்டியில் டேவிட் வார்னர் 62 பந்தில் 70 ரன்கள் அடித்து ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
நேற்று நடைபெற்ற 22 -வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதியது . இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி பஞ்சாப் மொஹாலி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் குவித்தது. பின்னர் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 19. 5 ஓவரில் 4 விக்கெட் இழந்து 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இப்போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் டேவிட் வார்னர் கடைசி வரை களத்தில் நின்று 62 பந்துகள் எதிர் கொண்டு 70 ரன்கள் மட்டுமே அடித்தார். இதன்மூலம் அதிக பந்துகளை எதிர்கொண்டு குறைவான ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் பட்டியலில் டேவிட் வார்னர் 3-வது இடத்தை பிடித்துள்ளார். ஜே.பி டுமினி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 63 பந்தில் 59 ரன்கள் எடுத்து முதல் இடத்தையும், ஆரோன் பிஞ்ச் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக 62 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து 2வது இடத்திலும் உள்ளனர்.