திருச்செந்தூரைச் சேர்ந்த எஸ்.பி. நாராயணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு விழா காலங்களில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அந்த சமயத்தில் கூட்ட நெரிசல் அதிக அளவில் இருப்பதால் பக்தர்கள் ஓய்வு எடுக்கவும், வாகனங்களை நிறுத்தவும் சிரமப்படுகிறார்கள். எனவே மூவர் சமாதிக்கு அருகே உள்ள கோவிலுக்கு சொந்தமான 30 ஏக்கர் நிலத்தை அரசு மீட்டெடுக்க வேண்டும். இந்த பகுதியை சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர்கள் சுடுகாடாக பயன்படுத்தி வருகிறார்கள்.
கோவில் நிலத்தை கோவிலுக்கு மட்டுமே பயன்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுப்பதோடு, அந்த இடத்தை பக்தர்கள் ஓய்வெடுப்பதற்கும், வாகனங்களை நிறுத்தவும் பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி கோவில் நிலத்தில் சடலங்களை புதைக்க அனுமதிக்க முடியாது. கோவில் நிலங்களை மதரீதியான காரியத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இந்த நிலத்தை மீட்பது தொடர்பாக ஏற்கனவே கோட்டாட்சியருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வருவாய்த்துறை அதிகாரிகள் இதுவரை நிலத்தை மீட்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டிப்பாக ஏற்க முடியாது. மேலும் இந்த வழக்கின் தீவிரத்தை அதிகாரிகள் கருத்தில் கொண்டு மனுதாரரின் கோரிக்கையை ஏற்று 3 மாத காலத்திற்குள் கோவில் நிலத்தை மீட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.