மது குடிப்பதை கண்டித்ததால் வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சோழபுரம் கீழூர் கிராமத்தில் செல்வமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் ரைஸ்மில் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இவருக்கு திலகவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒன்றரை வயது பெண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான செல்வ முத்து குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் அவரது பெற்றோர் மற்றும் மனைவி அவரை கண்டித்துள்ளனர். இதனால் கோபத்தில் வீட்டை விட்டு வெளியே சென்ற செல்வமுத்து நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை.
இதனை அடுத்து செல்வ முத்துவின் உறவினர்கள் அவரை அனைத்து இடங்களில் தேடி பார்த்தபோது நல்லமநாயக்கன்பட்டி ரயில்வே தண்டவாளத்தில் உடல் இரு துண்டான நிலையில் செல்வமுத்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மது குடித்ததை கண்டித்ததால் செல்வமுத்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.