விபத்தில் உயிரிழந்த மருத்துவரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் ஜோஸ்வா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பல் டாக்டராகவும், நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் ஜோஸ்வா தனது நண்பரை பார்த்து விட்டு நள்ளிரவு 1 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார்.
இவர் வேளச்சேரி 3-வது மெயின் சாலை வழியாக சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிளில் இருந்து ஜோஸ்வா கீழே விழுந்து படுகாயமடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஜோஸ்வா நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஜோஸ்வாவின் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு அவரது தாயார் மற்றும் சகோதரர் முன்வந்துள்ளனர். அதன்படி ஜோஸ்வா உடலிலிருந்து நுரையீரல், கணையம், இருதயம், சிறுநீரகம் போன்றவற்றை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் எடுத்து தானமாக வழங்கியுள்ளனர்.