மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தனியார் கடையில் மருந்து வாங்க பரிந்துரைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டீன் வனிதா எச்சரித்துள்ளார்.
மதுரை மாவட்ட அரசு மருத்துவமனையில் தினமும் 10 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தேவையான மருந்துகள் மருத்துவமனையின் மருந்தகங்களில் வழங்க வேண்டும் என்பது அரசின் கடமை. ஆனால் மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் குறிப்பிட்ட மாத்திரைகளை தனியார் மருந்து கடைகளில் வாங்கிக்கொள்ளும்படி நோயாளிகளிடம் பரிந்துரைப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த மருத்துவமனையில் ஏற்பட்ட மின்தடை காரணமாக இறந்த 3 நோயாளிகளில் ஒருவருக்கு தேவையான மருந்துகளை வெளியில் உள்ள மருந்து கடைகளில் வாங்க பரிந்துரைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலை ஏற்படுவதற்கு காரணம் சில மாதங்களுக்கு முன்பாக ஏற்பட்ட மாத்திரை குறைபாடே ஆகும். மாத்திரைகளை கொள்முதல் செய்த மருத்துவ சேவை கழகத்தை அணுகினால் நாட்கள் கடத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் மதுரை அரசு மருத்துவமனையில் குறைவில்லாமல் அனைத்து மாத்திரைகளும் கிடைப்பதாக டீன் வனிதா தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் நோயாளிகளை வெளியில் மாத்திரை வாங்குவதற்கு பரிந்துரைப்பது தவறு என்றும் அப்படி ஊழியர்கள் பரிந்துரைத்தால் புகார் தெரிவிக்கலாம். மேலும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.