கடலூரில் போதைக்காக மெத்தனால் குடித்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் சந்திரகாசி. இவர் கூலிதொழிலாளி ஆவார். இவர் தனது நண்பர்களான சுந்தரராஜ், மாயகிருஷ்ணன், குமரேசன் ஆகியோருடன் மது அருந்த நினைத்துள்ளார். ஆனால் ஊரடங்கு உத்தரவால் மதுபான கடைகள் அனைத்தும் மூடி இருப்பதால் அவர்களுக்கு எங்கும் மது கிடைக்கவில்லை. இதனால் இவர்கள் 5 பேரும் நேற்று முன்தினம் இரவு வித்தியாசமான திரவத்தில் தண்ணீர் கலந்து குடித்ததாக கூறப்படுகிறது.
குடித்த சில மணி நேரங்களில் சந்திரகாசியும் அவரது நண்பர்களும் வயிற்று வலியால் அவதிப்பட்டு உள்ளனர். இதில் சந்திரகாசி வலியால் துடிதுடிக்க அவரது குடும்பத்தினர்கள் பதற்றமடைந்து அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரை தொடர்ந்து அவரது நண்பர்களும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில்,
3 பேர் பரிதாபமாக உயிரிழக்க ஒருவருக்கு கண் பார்வை பறி போகியுள்ளது. இந்நிலையில் சம்பவம் குறித்து கடலோர காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்து அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், குமரேசன் என்பவர் வேலை பார்த்துவரும் பூச்சிக்கொல்லி மருந்து ஆலையில் இருந்து ஒரு லிட்டர் மெத்தனால் எடுத்து வந்ததாகவும் அதை போதைக்காக பயன்படுத்தும் விதமாக தண்ணீரில் கலந்து குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறப்பு நிகழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.