செந்துரை பகுதியின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை குட்டையில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள செந்துறை பகுதியில் இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன்-ஜான்சிராணி தம்பதியர். இவர்களுக்கு ஹன்சிகா, தனவர்ஷிணி என இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சமாதி குட்டை ஏரிக்கரையில் குணபிரியன், ராஜபிரகதி, தனவர்ஷிணி, ஹன்சிகா ஆகிய நான்கு குழந்தைகளும் விளையாடிக் கொண்டிருந்தனர்.
இதனையடுத்து குணபிரியன், ஹன்சிகா, ராஜபிரகதி ஆகிய மூன்று குழந்தைகளும் ஏரியில் தவறி விழுந்தனர். இதனை கண்ட தனவர்ஷினி அக்கம் பக்கத்தினர் இடையே கூறினார். கிராம மக்கள் ஓடிச்சென்று குட்டையில் மூழ்கிய குழந்தைகளை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் ஹன்சிகாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். குணபிரியன், ராஜபிரகதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து விசாரித்த காவல் துறையினர் இறந்த சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.