பெரம்பலூரில் மாடிப்படிக்கட்டில் இறங்கிய வாலிபர் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கவுண்டன்பட்டியில் ஜோதிராமலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வடிவேல் முருகன் என்ற மகன் இருந்தார். ஜோதிராமலிங்கம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒரு வருடமாக வடிவேல்முருகன் சென்னையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் பகுதியில் வசித்து வரும் பன்னீர்செல்வம் என்பவரது மகள் செல்வியை, வடிவேல் முருகன் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துள்ளார். இதையத்து லாடபுரத்தில் குடும்பம் நடத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று வடிவேல் முருகன் காலையில் மாடியிலிருந்து படிக்கட்டில் கீழே இறங்கி வந்துள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்து விட்டார். இதில் வேல்முருகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் வடிவேல் முருகனை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். அங்கிருந்து அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் வடிவேல் முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஜோதி ராமலிங்கம் பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.