காஞ்சிபுரம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சிறுமிகள் மற்றும் ஒரு இளம் பெண் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியை அடுத்த ராஜீவ்காந்தி சாலை அருகே வசித்து வரும் சித்ரா என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த தனது உறவினரான திலகா என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளார். பின் அங்கிருந்து நான்கு பள்ளி குழந்தைகளுடன் சித்ராவும், திலகாவும் மணிமங்கலத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரிக்கு குளிக்க சென்றுள்ளனர். அங்கே சித்ராவும், திலகாவும் ஏரிக் கரையில் நின்று துணி துவைத்துக் கொண்டிருக்க,
சிறுவர்கள் நான்கு பேரும் ஏரியில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென நான்கு பேரும் ஆழமான பகுதிக்குச் சென்று தத்தளிக்க அவர்களை காப்பாற்ற திலகா முதலில் எரிக்குள் இறங்கியுள்ளார். பின் நீச்சல் தெரியாமல் அவரும் மாட்டிக்கொள்ள சித்ரா ஏரிக்குள் இறங்கி நீந்தி சென்று முதலில் திலகாவையும், ஹரி என்ற சிறுவனையும் காப்பாற்றி கரையில் சேர்த்தார்.
பின் பூர்ணிமா, சத்யா, கலையரசி ஆகிய நான்கு சிறுமிகளை காப்பாற்ற முயன்ற போது சித்ராவும் அவர்களுடன் சேர்ந்து நீரில் மூழ்கினார். இதை கண்டு அலறிய திலகா அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்து அவர்களை காப்பாற்ற முயன்றார். இருப்பினும் அவரது முயற்சி எவ்வித பலனும் அளிக்காமல் 4 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து நேற்று தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நால்வரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.