வங்காளதேசத்தில் அமைந்துள்ள உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ஊழியர்கள் 52 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்காள தேசத்தின் தலைநகரில் 6 தளங்களைக் கொண்ட உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையான ஹஸிம் ஜூஸ் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் சிலர் தங்களுடைய உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக மேல் தளங்களிலிருந்து கீழே குதித்ததால் படுகாயமடைந்துள்ளார்கள்.
அதோடு மட்டுமின்றி இந்த பயங்கர தீயில் சிக்கிய 52 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். மேலும் சுமார் 30க்கும் மேற்பட்டோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து குறித்த தகவல் மீட்பு குழுவினர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர்கள் தொழிற்சாலையில் கொழுந்துவிட்டு எரியும் தீவினை அணைப்பதற்கு போராடி வருகிறார்கள்.