திண்டுக்கல் அருகே திருமணம் நிச்சயமான புதுமாப்பிள்ளை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியை அடுத்த பூண்டி ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவருக்கு அவரது வீட்டார் வருகின்ற செப்டம்பர் மாதம் திருமணம் செய்து வைக்க நிச்சயதார்த்தம் செய்திருந்தனர். இந்நிலையில் தோட்ட வேலைக்காக, அதிகாலையே எழுந்து சென்ற லட்சுமணன் இறந்த செய்தி அவர்களது பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகனின் உடலை கண்டு கதறி அழுதனர்.
இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் தோட்டத்தைச் சுற்றி சோலார் மின்வேலி வைக்கப்பட்டிருந்ததாகவும், வேலியின் மீது மேலே சென்று கொண்டு இருந்த உயர்மின் அழுத்த மின்சார கம்பி அறுந்து வேலியின் மேல் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்துள்ளது. இதை அறியாமல் லக்ஷ்மணன் வேலியை தொட்ட மறுகணமே பயங்கரமாக தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.