மாற்றுத் திறனாளி மகனை பராமரிக்க முடியாததால் கழுத்தை அறுத்து கொடூரமாக தந்தை கொலை செய்த சம்பவம்
திருச்சி மாவட்டம் தாபேட்டை அருகே வசித்து வருபவர் தங்கவேல். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வராணி. இத்தம்பதிக்கு கோபி என்ற ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 2012ஆம் ஆண்டு கல்லூரி படிக்கும்போது கோபிக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வாய் பேசமுடியாமல், நடக்க முடியாமல் மாற்றுத்திறனாளியாக வீட்டிலேயே இருந்துள்ளார்.
கடந்த சில தினங்களாக கணவன்-மனைவிக்கு இடையே நடந்து வந்த தகராறு காரணமாக செல்வராணி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். மாற்றுத் திறனாளி மகனை தனியாக பராமரிக்க இயலாத தங்கவேல் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். மிகவும் மன உளைச்சலில் இருந்த தங்கவேல் மகனை கொலை செய்வதற்காக வீட்டின் பின்புறம் உள்ள கழிவு நீர் தொட்டிக்கு அருகில் அழைத்துச் சென்றுள்ளார். பின் அரிவாளால் மகனின் கழுத்தை அறுத்து கழிவுநீர் தொட்டியில் போட்டு விட்டு அங்கிருந்து தப்பிவிட்டார்.
தங்கவேலுவின் தாயார் தனது பேரனை காணவில்லை என்று தேடும் பொழுது வீட்டின் பின்புறம் அவர் சடலமாக கிடந்தது தெரியவந்துள்ளது. இச்சம்பவத்தை போலீசிடம் தெரிவித்தார். இதனையடுத்து கோபியின் உடலை கைப்பற்றிய போலீசார் துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து மகனை கொன்று தப்பி ஓடிய தங்கவேலை மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். தந்தையே மகனை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.