தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் சைதாப்பேட்டை அப்பாவு நகர் மற்றும் சுப்பு பிள்ளை தோட்டம் பகுதி மக்களுக்கு மறு குடியமர்வு செய்ய தற்காலிக ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா. சுப்ரமணியன் மற்றும் சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அமைச்சர் மா. சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் பேசியதாவது, மாணவி பிரியா மரணம் அடைந்த வழக்கில் 2 மருத்துவர்கள் கவனக் குறைவாக செயல்பட்டதால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் அவர்களை கைது செய்தால் மருத்துவர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் மருத்துவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்று எவ்வாறு கருதுகிறார்களோ அதே போன்று தான் மாணவியின் குடும்பத்திற்கு ஈடுகட்ட முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளது. நாங்கள் போராட்டம் தொடர்பாக மருத்துவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறோம்.
இது போன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். இந்நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள அறுவை சிகிச்சை மருத்துவர்களுடன் வருகிற 23-ம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. மாணவி பிரியாவுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டதில் தவறில்லை. அந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு காலில் போட்ட கட்டை நீண்ட நேரமாக அகற்றாமல் மருத்துவர்கள் அலட்சியமாக இருந்தது தான் மாணவியின் மரணத்திற்கு காரணம். மேலும் இது கொலைக் குற்றமா என்ன என்பதை சட்டம் தான் தீர்மானிக்கும் என்று கூறினார்.