ஆப்கானிஸ்தானில் கவர்னர் கார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பாதுகாவலர் உயிரிழந்துள்ளார்
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் தலிபான் பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதலில் ஈடுபடுவது வழக்கம். அவர்களின் தாக்குதலினால் பெண்கள், ஒன்றும் அறியாத பிஞ்சு குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்து வருகின்றனர். அவர்களை கட்டுக்குள் கொண்டுவருவது அரசுக்கு பெரும் சவாலாக இருந்தது. பலமுறை அந்த அமைப்பின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. ஆப்கானிஸ்தானில் நூரிஸ்தான் கவர்னராக இருப்பவர் ஹபீஸ் அப்துல் கய்யாம்.
இன்று கவர்னரான இவர் தலைநகர் காபூலில் இருந்து பாதுகாப்பு வாகனங்கள் சூழ மஹிபார் பகுதியில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென மர்ம நபர்கள் அவரது வாகனம் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் கவர்னருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் அவரது பாதுகாப்பு வாகனத்தில் இருந்த பாதுகாவலர் உயிரிழந்துள்ளார். மற்றொரு பாதுகாவலர் பலத்த காயம் அடைந்துள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திடீரென நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்புகள் எதுவும் பொறுப்பேற்கவில்லை