Categories
தேனி மாவட்ட செய்திகள்

3 1/2 கோடி கேட்டு கொலை மிரட்டல்… விடிய விடிய விசாரணை… 5 தனிப்படையினருக்கு பாராட்டு…!!

தேனி மாவட்டத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளரை கடத்திய மர்மநபர்களை 12 மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீசாரை சூப்பிரண்டு அதிகாரி பாராட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் போடி மீனாட்சிபுரம் அடுத்துள்ள பொட்டல்களம் பகுதியில் தமிழக மக்கள் முன்னேற்ற கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் கவுர்மோகன்தாஸ்(48) வசித்து வந்துள்ளார். இவரது மனைவி ஜெயகிருஷ்ணலட்சுமி(45) போடி நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல வேலையை முடித்துவிட்டு ஜெயகிருஷ்ணலட்சுமி வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் அவரது கணவர் இல்லாத நிலையில் அவரது தோட்டத்தில் வேலை பார்ப்பவர்களிடம் விசாரித்தபோது சில மர்மநபர்கள் காரில் வந்து கவுர்மோகன்தாஸை கடத்தி சென்றதாக தெரிவித்துள்ளனர்.

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த கிருஷ்ணலட்சுமி உடனடியாக அவரது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட நிலையில் செல்போன் அனைத்து வைக்கப்பட்டிருந்துள்ளது. இதனையடுத்து சிறிது நேரத்திலேயே கவுர்மோகன்தாஸின் செல்போன் எண்ணிலிருந்து கிருஷ்ணலட்சுமிக்கு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய மர்மநபர்கள் உன்னுடைய கணவர் உயிருடன் வேண்டும் என்றால் 3 1/2 கோடி கொடுக்க வேண்டும் எனவும், இல்லையெனில் அவரை கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால் அதிச்சியடைந்த அவர் உடனடியாக போடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையிலும் மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி பிரவீன் உமேஷ் டோங்கரேவின் உத்தரவின் படி குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு அதிகாரி சுந்தர்ராஜன் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சம்பவ இடத்தில உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து கடத்தலுக்கு பயன்படுத்திய காரை அடையாளம் கண்டு இரவு முழுவதிலும் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அந்த கார் சிவகங்கையில் உள்ள மானாமதுரையில் இருப்பது தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து தனிப்படையினர் உடனடியாக மானாமதுரைக்கு சென்று அந்த கார் இருந்த வீட்டை சுற்றி வளைத்துள்ளனர். மேலும் அந்த வீட்டில் அடைத்து வைத்திருந்த கவுர்மோகன்தாஸையும் மீட்டுள்ளனர். இதனையடுத்து அவரை கடத்திய மானாமதுரையை சேர்ந்த ராஜேந்திரன்(48), ராஜிவ்காந்தி ஆகிய 2 பேரையும் கைது செய்து தேனிக்கு அழைத்து வந்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பணத்திற்காக கவுர்மோகன்தாஸை கடத்தியதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து மொத்தமாக 7 பேர் கொண்ட கும்பல் 3 வாகனத்தை வைத்துக்கொண்டு இந்த கடத்தலில் ஈடுபட்ட நிலையில் 2 பேரை கைது செய்து 3 வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார் தலைமறைவாக உள்ள மேலும் 5 பேரை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். இந்நிலையில் கடத்தப்பட்ட கவுர்மோகன்தாஸை 12 மணிநேரத்திற்குள் மீட்ட தனிப்படையினரை மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி மற்றும் திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. விஜயகுமாரி பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

Categories

Tech |