Categories
தேசிய செய்திகள்

டெல்லி வன்முறையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 52 ஆக அதிகரிப்பு!

வடகிழக்கு டெல்லியில் கடந்த வாரம் நிகழ்ந்த வன்முறையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது.

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லி ஷாகீன் பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடைபெறுகிறது.
கடந்த 23ம் தேதி வடகிழக்கு டெல்லி பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிர்ப்பு மற்றும் ஆதரவு தெரிவிக்கும் குழுவினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையில் முடிந்தது.

பாஜக தலைவர்களின் வெறுப்புப் பேச்சால் இந்த வன்முறை வெடித்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கும் உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. மேலும் காவல் துறையினர் சில இடங்களில் வன்முறைத் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.

இந்த வழக்கு நாளை டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்று 52 ஆக உயர்ந்துள்ளது. மேலும் படுகாயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த மோதல்களில் உளவுப்பிரிவு அதிகாரி அங்கித் சர்மா படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தேடப்பட்டு வந்த ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் கவுன்சிலர் தாஹிர் உசைன் இன்று டெல்லி நீதிமன்றத்தில் சரணடைந்தார். மேலும் இந்த வன்முறைகளில் ஈடுபட்டதாக 1820 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |