கணவரின் இறப்பிற்கு காரணமான பெண் போலீசை கைது செய்யகோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒளலூர் பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யுவராஜா என்ற மகன் உள்ளார். இவர் அங்குள்ள ஒரு தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வேலை பார்த்து வந்த சங்கீதா என்ற பெண் போலீசை காதலித்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தை அப்போதைய மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா என்பவர் நடத்தி வைத்துள்ளார்.
இந்நிலையில் யுவராஜுக்கு, தனது மனைவியான சங்கீதாவிற்கு ஏற்கனவே திருமணமாகி எட்டு வயது குழந்தை இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதன் பின் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அமுதா என்பவர் கணவன் மனைவி இருவரையும் இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரித்து வைத்துள்ளார். அதன்பின் கடந்த ஒரு மாதமாக சென்னையில் உள்ள தனது உறவினர் வீட்டில் யுவராஜ் தங்கியுள்ளார். இந்நிலையில் ஓளலூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்த சங்கீதா, தான் வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்துள்ளதாகவும், அங்கு செல்லப் போவதாகவும் யுவராஜிடம் தெரிவித்திருக்கிறார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த யுவராஜ் செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே துத்தநாகம் சாப்பிட்டு தற்கொலை செய்துள்ளார். அதன் பின் அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் யுவராஜ் பரிதாபமாக இறந்துவிட்டார். இந்நிலையில் தனது மரணத்திற்கு தனது மனைவி சங்கீதா, சங்கீதாவின் முன்னாள் கணவரான புருஷோத்தமன், போலீசார் ஜீவா மற்றும் சந்தியா இவர்கள்தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்திருக்கிறார்.
இதனால் யுவராஜின் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தின் அருகே உள்ள சாலையில் பெண் போலீஸ் சங்கீதாவை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் யுவராஜின் தற்கொலைக்கு காரணமான சங்கீதா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து, போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் செங்கல்பட்டு-மதுராந்தகம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.