40 ரூபாய் கடன் தொகையால் ஏற்பட்ட தகராறில் வாலிபரை நண்பர் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள மாதவரம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பட்டறையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் தனது தனது நண்பரான நாகமுத்து மற்றும் சிலருடன் அமர்ந்து மது குடித்துள்ளார். இதனை அடுத்து மணிகண்டனிடம் நாகமுத்து தனக்கு தரவேண்டிய 40 ரூபாய் கடனை திருப்பி தருமாறு கேட்ட போது நண்பர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கோபமடைந்த நாகமுத்து கத்தியால் மணிகண்டனை சரமாரியாக குத்தியுள்ளார்.
இதனால் படுகாயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மாதவரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மணிகண்டனின் உடலை மீட்டு சென்னை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நாகமுத்துவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.