ஊரடங்கு முடியும் வரை பத்திரப்பதிவு துறைக்கு அத்தியாவசிய பணியிலிருந்து விலக்கு தர முதல்வர் பழனிசாமிக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்., 20ம் தேதி முதல் சில தொழில்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அது குறித்து மாநில அரசுகள் முடிவு எடுத்து கொள்ளலாம், ஆனால் ஊரடங்கு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் ஊரடங்கு தொடர்பாக தற்போதைய கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் 20ம் தேதி முதல் பதிவுத்துறை அலுவலகங்கள் செயல்படும் என பதிவுத்துறை தலைவர் நேற்று அறிவித்தார். பணிக்கு வரும் ஊழியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 1 மணி நேரத்திற்கு 4 டோக்கன் வீதம் நாளொன்றுக்கு 24 டோக்கன்கள் வரை பதிவுசெய்ய அனுமதி அளிக்கபட்டுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை சேர்ந்தவராக இருந்தால் பதிவு பணிகள் செய்யப்படாது என்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் அலுவலகம் இயங்கினால் தற்காலிக இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர். இந்த நிலையில் ஊரடங்கு முடியும் வரை பத்திரப்பதிவை நிறுத்தி வைக்க பத்திரம் எழுதுவோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஊரடங்கு முடியும் வரை பத்திரப்பதிவு துறைக்கு அத்தியாவசிய பணியிலிருந்து விலக்கு தர கோரிக்கை ஆவண எழுத்தாளர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி பத்திரப்பதிவை நிறுத்தி வைக்குமாறு முதல்வர் பழனிசாமிக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.