மாணவர்களுக்கு வரும் டிசம்பர் 14ம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கப்படுமென்று மாநில அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 25ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. எனவே ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், டிசம்பர் 14ம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்படும் என ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது. 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினசரி மூன்று மணி நேரம் வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் தினமும் காலை 10 – மதியம் 1 மணி வரை கோவிட்-19 பாதுகாப்பு வழிமுறைகளுடன் வகுப்புகள் நடைபெறும் என ஹரியானா பள்ளிக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் 9ம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு உள்பட சீனியர் மாணவர்களுக்கு டிசம்பர் 21ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும் எனவும், மாணவர்கள் வகுப்புகளுக்கு வருவதற்கு 72 மணி நேரத்துக்கு முன்பாக கொரோனா பரிசோதனை சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் போன நவம்பர் மாதமே பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளிகளை திறக்க வேண்டாம் என பெற்றோர் கோரிக்கை விடுத்ததால் பள்ளிகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் தமிழகத்தில் எந்நேரமானாலும் பள்ளிகளை திறக்க அரசு தயாராக இருப்பதாகவும், பெற்றோர்களின் கருத்துகளுக்கு ஏற்ப பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.