Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூன் 3வது வாரத்தில் நடத்த முடிவு; இம்மாத இறுதியில் அட்டவணை வெளியீடு!

10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூன் 3வது வாரத்தில் நடத்த முடிவு செய்துள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மே 17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாநிலத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு 10,12ம் வகுப்புகளை தவிர பிற வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.தொடர்ந்து கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் 12ம் வகுப்பு தேர்வு நிறைவடைந்துள்ளது.

இதனால் 10ம் வகுப்பு தேர்வுகள் நடத்தப்படுமா? இல்லையா? என கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனிடையே 10 நாட்களில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்தி முடிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாகவும், மே மாதத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது என தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவல் உறுதியாகவில்லை.

இதனை தொடந்து 10வகுப்பு தேர்வு ரத்து செய்யவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், பொதுத்தேர்வை ரத்து செய்வதற்கு வாய்ப்பில்லை என முதல்வர் பழனிசாமி அறிவித்தார். மேலும் 10ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதவேண்டியது அவசியம் என்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஜூன் 3வது வாரத்தில் நடத்த முடிவு செய்துள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இந்த மாத இறுதியில் அட்டவணை வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. மேலும் தேர்வுகளுக்கு இடையே விடுமுறையை குறைத்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் என தேர்வு வைத்து விரைவாக முடித்து விட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் அளித்துள்ளனர். 11, 12ம் வகுப்பில் ஒரு சில தேர்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் , அந்த தேர்வுகளையும் நடத்தி முடிக்க திட்டமிட்டப்பட்டுள்ளது என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

Categories

Tech |