தமிழ்நாட்டில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கைகள் நேற்று நடைபெற்றது. ஆனால், வாக்கு எண்ணிக்கையின்போது பல இடங்களில் முறைகேடு நடைபெற்றதாக பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டினர்.
இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில், அக்கட்சியின் துணைத் தலைவர் தாமோதரன், நிர்வாகி ராஜேந்திரன் ஆகியோர் வாக்குகள் எண்ணிக்கையில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து தேர்தல் ஆணையரை சந்தித்துப் புகார் அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தாமோதரன், “எங்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அழகிரியின் உத்தரவின் பேரில் தேர்தல் ஆணையரைச் சந்தித்து தேர்தல் முறைகேடுகள் குறித்து ஆதாரங்களுடன் புகார் கொடுத்துள்ளோம். சிவகங்கை மாவட்டத்தில் முறைகேடு செய்கின்றனர் எனக் கூறினோம். அதற்கான ஆதாரங்களையும் கொடுத்துள்ளோம்.
கரூரிலும் இதே நிலைதான். நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்தும் நடவடிக்கைகள் இல்லை. ஒரு வெற்றிக்கு இரண்டு தேர்தல் முடிவுகளை அறிவித்து சிவகங்கை மாவட்டத்தில் ஜனநாயகத்தை கேலிக்கூத்து ஆக்கியுள்ளனர்.