தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய பின் நாளை மறுநாள் ஆம்பன் புயலாக மாறும்.எனவே வங்கக்கடலில் நாளை 45-65 கி.மீ வேகத்தில் காற்று வீசம் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
குறிப்பாக நாளை முதல் வரும் 18ம் தேதி வரை தென்கிழக்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவாகும் ஆம்பன் புயல் தமிழகத்திற்கு வர வாய்ப்பில்லை, ஆந்திரா அல்லது வங்க தேசம் நோக்கி செல்லும். ஆந்திரா அருகே புயல் கரையை கடந்தால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தகவல் அளித்துள்ளது.
மேலும் வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது.