தமிழக அரசு தமிழ் மொழியைக் காக்க தமிழ் சொற்குவை வலைதளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழ் பேசும் போதும் எழுதும் போதும் பிற மொழிச் சொற்களின் கலப்பை தவிர்க்கவும் கலைச் சொற்களைத் தமிழில் பயன்படுத்தும் சொற்குவை வலைதளத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை சார்பில் சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி மையத்தில் தனி அலுவலகம் அமைக்கப்பட்டு sorkuvai.com எனும் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
பிறமொழிச் சொற்களை நீக்கி தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தவும் பிறமொழியில் உள்ள கலைச்சொற்களை தமிழ் மொழியில் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.ஆங்கிலத்தில் உள்ள ஒரு அரிய சொல்லுக்கு தமிழில் என்ன பொருள், இலக்கியத்தில் என்ன பொருள், மேலும் இந்த சொல் எப்படி உருவாகியது போன்ற சந்தேகத்தையும் கேட்டுத் தெளிவு பெற 14469 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் தற்போது காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள், அறிஞர்கள் மற்றும் மாணவர்கள் மொழி சார்ந்த தங்கள் சந்தேகங்களை கேட்டுத் தெளிவு பெறவும் வசதி செய்யப்பட்டுள்ளது. உதாரணமாக செல்பி என்பதற்கு தாமி என்றும் whatsapp என்பதற்கு கட்செவி என்றும் இது போன்று பல தமிழ்ச் சொற்களை உருவாக்கி உள்ளனர். இதற்காக மொழி சார்ந்த அறிஞர்களைக் கொண்டு தனித்தனியாக குழுக்கள் அமைத்து கலைச்சொற்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.
அது மட்டுமின்றி மருத்துவம் பொறியியல் ஊடகம் என துறை சார்ந்த வல்லுனர்கள்அந்தத் துறைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப வார்த்தைகளும் தமிழாக்கம் செய்யப்பட்டு வருகின்றன.பொதுமக்கள் இளைஞர்கள் தமிழ் ஆர்வலர்கள் பிறமொழி வார்த்தைகளுக்கு சரியான சொற்களை கொடுத்தால் தங்களின் குழு அந்தச் சொற்களை பரிசீலனை செய்து அவற்றையும் இந்த அகராதியில் சேர்த்துக் கொள்வோம் என்றும் அகரமுதல் இயக்குனர் காமராசு தெரிவித்துள்ளார்.