நெய்வேலி என்எல்சியில் திருட்டு கும்பலிடம் கத்திகுத்து வாங்கிய பாதுகாப்பு படை வீரருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி குடியிருப்பு வளாகத்தில் வசித்து வருபவர் செல்வேந்திரன். இவர் நெய்வேலி மந்தாரக்குப்பத்திலுள்ள என்எல்சி நிலக்கரி சுரங்கத்தின் இரண்டாவது வாயிலில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு நிலக்கரி சுரங்கத்தின் இரண்டாவது வாயிலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சமயத்தில் மணி, சபரிவாசன், சுதாகர், சண்முகம் ஆகியோர் சுரங்கத்திலிருந்து தாமிரம் இரும்பு உள்ளிட்ட பொருட்களை திருட முயன்றனர்.
அப்போது அவர்களை பாதுகாப்பு படை வீரர் செல்வேந்திரன் தடுக்க முயற்சித்தார். அவரிடமிருந்து தப்பிப்பதற்காக அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செல்வேந்திரனை சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து ஓடினர்.
இதில் வலியால் கதறிய அவரை பணியில் ஈடுபட்டிருந்த சக மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் விரைந்து வந்து மீட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் சபரிவாசன், சண்முகம் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மணி, சுதாகர் ஆகியோரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.