காயத்துடன் சுற்றித்திரியும் காட்டு யானையை பிடிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காட்டு யானை ஒன்று சுற்றித் திரிகிறது. இந்த காட்டு யானையை பிடிப்பதற்காக வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வபோது காயத்தின் வலியால் அவதிப்பட்டு வரும் இந்த காட்டு யானை குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில் கூடலூரில் தொடர்ந்து மழை பெய்ததால் இந்த காட்டு யானையை பிடிக்கும் பணி தாமதம் ஆகியுள்ளது. மேலும் அந்த காட்டு யானை நிற்கும் இடத்தில் மயக்க ஊசி செலுத்துவதற்கு போதிய இட வசதி இல்லை. எனவே அந்த காட்டு யானை திறந்த வெளி பகுதிக்கு இடம்பெயரும் சமயத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் மரக்கூண்டு அமைத்து யானையை அதில் அடைத்து சிகிச்சை அளிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.