கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 128 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,376 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 49 வயது நபர் கடந்த 4ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சில நாட்களில் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் அவருக்கு பிளாஸ்மா சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்படி, ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவரின் பிளாஸ்மாவை 49 வயது நபரின் உடலில் செலுத்தி சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
இந்த சிகிச்சை முறையின் மூலம் அவர், 4 நாட்களில் குணமடைந்ததை அடுத்து வென்டிலேட்டர் உதவியின்றி சுவாசிக்கத் தொடங்கியுள்ளார். இந்த நிலையில், இன்று வீடியோ கான்பரென்ஸ் மூலம் பேசிய செல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ” கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் பிளாஸ்மா சிகிச்சையின் வரையறுக்கப்பட்ட சோதனைகளுக்கு மட்டுமே மத்திய அரசு எங்களுக்கு அனுமதி அளித்தது. அடுத்த 2-3 நாட்களில், நாங்கள் அதிகமான சோதனைகளை மேற்கொள்வோம், பின்னர் அடுத்த வாரம், அனைத்து தீவிர நோயாளிகளுக்கும் பிளாஸ்மா சிகிச்சை வழங்க அனுமதி பெறுவோம்” என தெரிவித்துள்ளார்.