கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக டெல்லி மற்றும் காஜியாபாத் இடையிலான எல்லைகள் முழுமையாக சீல் வைக்கப்பட்டுள்ளன.
காசியாபாத்தில் இருந்து டெல்லிக்குச் சென்ற 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் இதுவரை கொரோனா தொற்று பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 2081 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 1397 பேரின் மாதிரிகளை சோதனை செய்ததில் சுமார் 78 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட அனைத்து நோயாளிகளில் 26 பேர் ஐ.சி.யு மற்றும் 5 வென்டிலேட்டரில் உள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறியுள்ளார். இந்த நிலையில் காசியாபாத்தில் இருந்து டெல்லிக்கு வந்த 6 பேருக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து, காஜியாபாத்-டெல்லி எல்லைகளை மூட காசியாபாத் மாவட்ட நீதவான் அஜய் சங்கர் பாண்டேவால் உத்தரவிட்டுள்ளார். சீல் வைக்கப்படுவதை தொடர்ந்து டெல்லி-காஜியாபாத் எல்லை சாவடியை கடக்க எண்ணற்ற வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன.
இதன் காரணமாக அப்பகுதி மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. இதையடுத்து காவல்துறை அதிகாரிகள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, அதிகாரிகளால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் பாஸை எடுத்துச் செல்லும் அத்தியாவசிய சேவைகள் மற்றும் சுகாதார ஊழியர்கள் ஆகியோர் எல்லையில் காவல்துறையினரால் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, சரியான காரணத்துடன் கடந்து செல்ல விரும்பும் மற்றவர்களுக்கு சிறப்பு மின்-பாஸ் வழங்கப்படும் என்று காஜியாபாத் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் டெல்லி காசியாபாத் எல்லை சீல் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தொடர்பான விவரங்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.