Categories
தேசிய செய்திகள்

டெல்லி கலவரம் : இரண்டு செய்தி சேனல்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியது மத்திய அரசு!

டெல்லி கலவரம் குறித்து தவறான தகவல் வெளியிட்டதாக நேற்று இரவு கேரளாவில் இருந்து இயங்கும் 2 தொலைக்கட்சி சேனல்களுக்கு விதிக்கப்பட்ட 48 மணி நேர தடை நீக்கப்பட்டதை அடுத்து செய்தி சேனல்களில் ஒளிபரப்புத் தொடங்கியது.

மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லி ஷாகீன் பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டம் நடைபெறுகிறது. கடந்த 23ம் தேதி வடகிழக்கு டெல்லி பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு (சிஏஏ) எதிர்ப்பு மற்றும் ஆதரவு தெரிவிக்கும் குழுவினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையில் முடிந்தது.

இந்த வன்முறை தொடர்பான செய்திகளை ஒரு சார்பாக ஒளிபரப்பியதாக மலையாள செய்தி தொலைக்காட்சிகளான ஏசியா நெட் நியூஸ் மற்றும் மீடியா ஒன் சேனல்களுக்கு 48 மணி நேரம் மத்திய அரசு தடை விதித்துள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 7:30 மணியிலிருந்து 48 மணி நேரத்திற்கு தடை விதிப்பதாக தகவல் ஒலிபரப்புத்துறை தெரிவித்துள்ளது. ஏசியாநெட் நியூஸ் ஒரு வழிபாட்டுத்தலத்தின் மீதான தாக்குதலை மிகைப்படுத்தி காட்டியதாகவும், ஒரு சமுதாயத்திற்கு சாதகமாக செயல்பட்டது போல் தெரிவதாகவும் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை கூறியிருந்தது.

இதேபோல மீடியா ஒன் தொலைக்காட்சியின் செய்திகள் சிஏஏ ஆதரவாளர்களின் கலவரத்தின் மீது மட்டுமே கவனத்தை குவிப்பதாக இருந்ததாகவும் கூறப்பட்டது. இரண்டு சேனல்களில் செய்தியாளர்களின் வார்த்தைகள் இரு சமுதாயத்திடையேயான நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் இருந்ததாகவும் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை விளக்கம் அளித்திருந்தது.

இரு செய்தித் தொலைக்காட்சி சேனல்களுக்கு 48 மணி நேரம் மத்திய அரசு தடை விதித்திருந்த நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தததால் அந்த தடையை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் தற்போது நீக்கியது. இதையடுத்து செய்தி சேனல்களில் ஒளிபரப்புத் தொடங்கியது. 48 மணிநேரம் முடியும் முன்னரே அந்த சேனல்கள் இப்போது மீண்டும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

Categories

Tech |