கொரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் குணமடைந்தார். பாதிப்பில் இருந்து மீண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது கடந்த 17ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடும் காய்ச்சல் மற்றும் திடீரென ஆக்சிஜன் அளவு குறைவினால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதல்கட்ட ரத்தம் உள்ளிட்ட மாதிரிகளில் கொரோனா தொற்று நெகெட்டிவ் என்று வந்தது. ஆனால் 2வது பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், அவருக்கு 19ம் தேதி காலை முதல் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. சத்யேந்தர் ஜெயினின் நுரையீரல் தொற்று அதிகரித்துள்ளதை அடுத்து, அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து, அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க டெல்லி அரசு முடிவெடுத்திருந்தது. பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் அவருக்கு செயற்கை சுவாசம் வழங்குவது நிறுத்தப்பட்டது. மேலும், அவர் ஜெனரல் வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில், சத்யேந்தர் ஜெயின் பூரண குணமடைந்ததால் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.