டெல்லி இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகே நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் பயங்கரவாத சம்பவம் தான் என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரான் மல்கா கூறியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை டெல்லி இஸ்ரேல் தூதரகம் அருகே குறைந்த தீவிரம் கொண்ட I.E.T வெடிபொருள் வெடித்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து அவர் ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “2012ஆம் ஆண்டு நடைபெற்ற தாக்குதலுக்கும் தற்போது நடைபெற்ற குண்டு வெடிப்புக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இந்த தாக்குதலின் மூலம் எங்களை பயமுறுத்த முடியாது.
என்ன நடந்தாலும் எங்களுடைய அமைதி முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கும்.மேலும் இஸ்ரேல்- அரபு நாடுகளுக்கு இடையேயான சமாதான முயற்சிகளையும் தடுக்க முடியாது. அதுவும் எந்தவித பிரச்சனையுமின்றி நடைபெறும். இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் பயங்கரவாத தாக்குதல் தான் என்பதற்கு சில ஆதாரங்கள் கிடைத்துள்ளது. மேலும் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இஸ்ரேலுக்கு எதிரான வாசகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” என்றார்.