கடந்த பிப்., 23ம் தேதி டெல்லி போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது குறித்த சிசிடிவி காட்சிகளை டெல்லி போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடந்த நிலையில், இந்த சட்டத்திற்கு ஆதரவாக மற்றொரு பிரிவினரும் கடந்த 23ம் தேதி போராட்டம் நடத்தினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர்.
அப்போது போலீசார் தலையிட்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசி மோதலை கட்டுப்படுத்தினர். ஆனால் இந்த மோதல் மறுநாளில் மிகப்பெரும் வன்முறையாக வெடித்தது. ஜாப்ராபாத், மவுஜ்பூர், சந்த்பாக், குரேஜிகாஸ், பஜன்புரா, யமுனா விகார் என வடகிழக்கு டெல்லி முழுவதும் வன்முறை பரவியது. வன்முறையாளர்கள் கடைகள், வீடுகளுக்கு தீ வைத்தும், கல், செங்கல், பாட்டில்களை வீசியும் பயங்கர மோதலில் ஈடுபட்டனர். சில இடங்களில் துப்பாக்கிச்சூடும் நடந்தது.
இதையடுத்து வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர துணை ராணுவம் அழைக்கப்பட்டது. மேலும் வன்முறை பாதித்த பகுதிகளில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்த வன்முறையில் ஒரு தலைமை காவலர் உயிரிழந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேலும் இந்த வன்முறையில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
https://twitter.com/JournoSweta/status/1235456949283467264
இந்த நிலையில் டெல்லி கலவரம் குறித்த சிசிடிவி காட்சிகளை டெல்லி போலீஸ் வெளியிட்டுள்ளது. அதில் இருதரப்பினர் மோதிக் கொள்ளும் காட்சிகள் வெளியிடப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. மேலும் டெல்லி கலவரத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரிய வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.