இந்தியாவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்தில் டெல்லி 3ம் இடத்தில் உள்ளது. டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை 27,654 ஆக உள்ளது. இந்த நிலையில் ஜூன் 1ம் தேதி கொரோனா தாக்கத்தால் டெல்லியில் ஒருவாரத்துக்கு எல்லைகள் மூடப்படுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தார். அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே டெல்லிக்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல அரசு அலுவலர்கள் தங்களது அடையாள அட்டையைக் காண்பித்து பயணத்தை மேற்கொள்ளலாம்.
பாஸ் பெற்றவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். ஒரு வாரத்திற்கு பின்னர் எல்லையை திறப்பதா? அல்லது நீடிக்கலாமா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என அறிவித்தார். இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லி மாநில எல்லைகள் நாளை முதல் திறக்கப்படுவதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லியில் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட 70 சதவீத கொரோனா வரி அரசாணை வாபஸ் பெறப்படுவதாக கூறியுள்ளார். டெல்லியில் நாளை முதல் உணவகங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லி அரசின் கீழ் வரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெல்லியை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும் என்றும் டெல்லியில் உள்ள மத்திய அரசு மருத்துவமனைகளில் அனைவருக்கும் சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தகவல் அளித்துள்ளார்.