மலைக்கிராம பெண்ணிற்கு பரிசலில் சென்று பிரசவம் பார்த்த மருத்துவ பணியாளர்களை அனைவரும் பாராட்டியுள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைக்கட்டி பகுதியில் கூலித் தொழிலாளியான மாரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபா என்ற மனைவி உள்ளார். நிறைமாத கர்ப்பிணியான தீபாவை மாரி அவரது பெற்றோர் வசிக்கும் காந்தவயல் மலைக்கிராமத்திற்குப் பிரசவத்திற்காக அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென தீபாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டதால் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து 2 ஆம்புலன்சுகளில் மருத்துவ பணியாளர்கள் அங்கு சென்றுள்ளனர். ஆனால் காந்தவயல் மலை கிராமத்திற்கு செல்லும் வழியில் இருக்கும் காந்தையாற்றின் குறுக்கே உள்ள பாலம் தண்ணீரில் மூழ்கி இருந்ததால் ஆம்புலன்ஸ் அங்கே செல்லமுடியவில்லை. அதன்பின் ஒரு ஆம்புலன்ஸிலிருந்த மருத்துவ பணியாளர்கள் பரிசல் மூலமாக ஆற்றை கடந்து கிராமத்திற்கு சென்றனர். மேலும் மற்றொரு ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவ பணியாளர்கள் காட்டுப் பகுதியை சுற்றி காந்தவயல் கிராமத்திற்குச் சென்றனர்.
அப்போது பிரசவ வலியால் துடித்த தீபாவிற்கு பரிசல் மூலம் கிராமத்திற்கு சென்ற மருத்துவ பணியாளர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். இந்த பிரசவத்தில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. உடனடியாக மருத்துவ பணியாளர்கள் பிறந்த குழந்தையை பரிசல் மூலமாக ஆம்புலன்சுக்கு எடுத்துவந்து சிறுமுகை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சேர்த்துவிட்டனர். மேலும் காட்டுப்பகுதி வழியாகச் சென்ற ஆம்புலன்ஸில் தாய்க்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து தீபாவும் அவரது குழந்தையும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த பிரவதிற்காக அரும்பணியாற்றிய மருத்துவ பணியாளர்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.