சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அம்மா உணவகத்தில் விலையில்லா உணவு வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களான திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை முதல் (ஜூன் 19ம் தேதி) முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு வழங்கப்பட்ட வந்தது. ஜூன் 1ம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் அம்மா அம்மா உணவகங்களில் விலையில்லா உணவு விநியோகம் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் நாளை முதல் 30ம் தேதி வரை உணவு விநியோகம் செய்ய முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சமுதாய சமூக கூடங்களை மேலும் வலுப்படுத்தவும் , அங்கு சமைக்கும் உணவுகளை வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்யவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். நோயாளிகள், ஆதவற்றோர்கள் மற்றும் முதியோர்களுக்கு சரியான நேரத்தில் உணவை விநியோகம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.