நடந்து முடிந்த டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியாக உள்ள நிலையில் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் என்று வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
டெல்லியில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி 50 முதல் 55 இடங்களை வெல்ல வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் நான்கு இடங்களில் மட்டுமே வென்ற பாரதிய ஜனதா கட்சி இந்த முறை கூடுதலாக சில இடங்கள் கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆனால் காங்கிரஸ் மிகக்குறைந்த இடங்களை கைப்பற்றும் என்றும், வாக்குக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு தெரிவிக்கின்றது. வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வாக்கு எண்ணிக்கை முடிவுகளுக்காக பாரதிய ஜனதா கட்சி காத்து இருப்பதாக கூறியுள்ளார்.
வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை நம்புவது இல்லை என்று கூறியுள்ள அவர், கடந்த முறை இதே போன்று கருத்துக்கணிப்புகள் பொய்யாகி போனதாக தெரிவித்துள்ளார்.