பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வத்தல்பட்டி என்ற கிராமம் உள்ளது. இக்கிராமத்திற்கு மக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் கடந்த 25 நாட்களாக வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் அளித்தனர். ஆனால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஊராட்சி நிர்வாகத்தின் இச்செயலால் மிகுந்த கோபம் அடைந்த கிராம மக்கள் கையில் காலிக்குடங்களுடன் வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் வத்தலகுண்டு போலீசார் விரைந்து வந்து கிராம மக்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். அதன் பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் குணவதியிடம் இது குறித்து மனு அளித்தனர்.